மலேசியாவில் கொத்தடிமையாக இருக்கும் கணவரை மீட்டுத் தர வேண்டும் - கலெக்டரிடம் பெண் மனு

மலேசியாவில் கொத்தடிமையாக இருக்கும் கணவரை மீட்டுத் தர வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பெண் மனு அளித்தார்.

Update: 2021-06-19 14:19 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது44). இவருடைய மனைவி அமராவதி. இவர்களுக்கு ஆதித்யன் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ஆதித்யன் 6-ம் வகுப்பும், பிரியதர்ஷினி 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

2 ஆண்டுக்கு முன்பு முருகானந்தம் மலேசியாவிற்கு ஓட்டல் வேலைக்காக அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை என கூறி சொந்த ஊருக்கு திரும்ப முருகானந்தம் முடிவு செய்து நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அவர்கள் முருகானந்தத்தை விட மறுத்ததுடன் கொத்தடிமை போல நடத்தி வருவதாகவும், கடந்த 5 மாதங்களாக சம்பளம் தரவில்லை எனவும், எப்படியாவது என்னை ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யும் படியும் தனது மனைவியிடம் செல்போனில் பேசும்போது கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து தனது கணவரை மீட்டு தர வேண்டும் என அமராவதி தனது மகன் ஆதித்யனுடன் நேற்றுகாலை தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், கலெக்டர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், எனது கணவரை கொடுமைப்படுத்தி வருகின்றனர். எந்த நேரம் என்ன ஆகும் என்று தெரியாமல் போராடும் எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதுடன் முகவர், ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமராவதி கூறும்போது, எனது கணவருக்கு ஆரம்பத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளம் என அழைத்து சென்றனர். ஆனால் குறைவாக தான் சம்பளம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பல முறை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் ஊருக்கு வர முயற்சி செய்தார். ஆனால் அவரை ஓட்டல் நிர்வாகத்தினர் கொத்தடிமையாக நடத்தி வருகின்றனர். இது குறித்து எனது கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பிய முகவரிடம் கேட்டால் அவரும் உரிய பதில் அளிக்கவில்லை. எனது கணவர் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக தெரிகிறது. எனவே எனது கணவரை உடனடியாக மீட்டு ஊருக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்