குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இ-பாஸ் நடைமுறை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 580-க்கும் மேல் இருந்தது. தற்போது 200-க்கும் கீழ் குறைந்து உள்ளது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பாதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இ-பதிவு நடைமுறை இருந்தபோது பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்து நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தடையை மீறி தங்கி வந்தனர். இதை தடுக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
எண்ணிக்கை குறைந்தது
அதன்பின்னர் வெளியிடங்களில் இருந்து வருகிறவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சியில் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது 15 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். குன்னூர் நகராட்சியில் 3 பேர், கூடலூர் நகராட்சியில் 6 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 மடங்கு அதிகரிப்பு
இதேபோல் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 120 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 33 பேர், குன்னூர் ஒன்றியத்தில் 2 பேர், கோத்தகிரி ஒன்றியத்தில் 30 பேர், கூடலூர் ஒன்றியத்தில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் பாதிக்கப்படுபவர்களை விட 2 மடங்கு அதிகமான நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். தினமும் 2,500 பேரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
நீலகிரியில் கொரோனா நோயாளிகளுக்காக 2,474 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,435 படுக்கைகள் காலியாக இருக்கிறது. சிறிய மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.