காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்
கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
பலாப்பழ சீசன்
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக கோடை வறட்சியால் வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு காரணமாக காட்டுயானைகள் ஊருக்குள் அதிகளவில் புகுந்து வந்தன. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தின. மேலும் வீடுகளை உடைத்து உணவு பொருட்களை தின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் வனம் பசுமைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் பலாப்பழ சீசன் நிலவுவதால் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் காட்டு யானைகளால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வீடு சேதம்
கூடலூர் தாலுகா புளியம்பாறை அருகே கத்தரிதோடு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் 6 காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் வீடுகளில் பதுங்கி இருந்தனர்.
இந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் அலறினர்.
உரிய இழப்பீடு
இதைத்தொடர்ந்து கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று விடியற்காலையில் காட்டுயானைகள் அங்கிருந்து சென்றன. மேலும் நாடுகாணி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் வந்து சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.