‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கலெக்டர் உத்தரவு
‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 கோப்புகளில் கையொப்பமிட்டார். அதில் ஒன்றாக ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை அறிவித்து அதற்கென தனி துறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு உட்கட்டமைப்பு, சமூக சொத்துகள், தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகள் என 3 ஆக பிரித்துள்ளார். அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு 100 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிட்டுள்ளார்.
தனிநபர் கோரிக்கைகளை பொறுத்தவரை விரைந்து அவர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, சாத்தியமானவை அனைத்துக்கும் உடனடி தீர்வும், முடியாதவற்றுக்கு என்ன காரணத்தால் கோரிக்கை நிறைவேற்ற இயலவில்லை என்று தெளிவான விளக்கமும் அளிக்க வேண்டும். தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து மனு செய்வதை தவிர்க்கும் வகையில் மாற்று வழியில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்துகொள்ள வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
மறுபரிசீலனை
தேனி மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் இதுவரை 10 ஆயிரத்து 483 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 22 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. 1,528 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதர மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. நிராகரிக்கப்பட்ட மனுக்களை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக வரும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தியும், தகுதி வாய்ந்த மனுக்களுக்கு அரசின் உரிய பயன்கள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.