கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம்
கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கூடலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய- மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் காலை முதலே மருத்துவமனை வளாகத்திற்குள் குவிய தொடங்கினர். முகாமில் 300 பேருக்கு மட்டும் தடுப்பூசி போட நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசி போடுவதற்கான டோக்கனை வாங்க முயன்றனர். இதனால் அங்கு கொரோனா தொற்று பரவும் அவலநிலை ஏற்பட்டது.