2 லட்சத்து 72 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் - கலெக்டர் லலிதா பேச்சு
கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை 2 லட்சத்து 72 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கலெக்டர் லலிதா தெரிவித்தார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவற்றை வழங்கிய மாவட்ட கலெக்டர் பேசினார்.
அப்போது அவர் கூறு்கையில், கொரோனா தொற்று நிவாரண நிதி 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 72 ஆயிரத்து 18 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஒரே நாளில் நிவாரணம் வழங்க முடியாது என்ற காரணத்தினால் டோக்கன் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு படிப்படியாக நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அவசரப்படாமல் பொறுமை காத்து நிவாரண பொருட்களை பெற்று செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளில் நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் பாலாஜி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.