சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
மயிலாடுதுறை அருகே சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகை தோப்பு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). தொழிலாளியான இவர் ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சிறிய சைக்கிளை ஓட்டி விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுவனை தூக்கி கழுத்தை நெரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. சிறுவன் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து சிறுவனை விட்டுவிட்டு கணேசன் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணேசனுக்கும், சிறுவனின் தந்தை குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.