காஞ்சீபுரம் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
காஞ்சீபுரம் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.;
வாலிபர் மாயம்
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். பின்னர் நண்பர்கள் மட்டும் வீடு
திரும்பிய நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் சிவகாஞ்சி போலீசில் மணிகண்டன் மாயமானதாக புகார் செய்தனர்.மாயமான மணிகண்டன் குறித்து சிவகாஞ்சி போலீசார் தீவிரமாக
தேடி வந்தனர்.மேலும் மணிகண்டனுடன் மது குடித்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வாலிபர் ஒருவரது உடல் சற்று அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின்பேரில் கீழ்கதிர்பூர் பகுதிக்கு விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் விவசாய கிணற்றில் கிடந்த வாலிபரின் உடலை தீயணைப்புத் துறையினர் உதவியோடு மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் விவசாய கிணற்றில் கிடந்தது கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும் கிணற்றின் அருகாமையில் மதுபான பாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பாலுசெட்டி சத்திரம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபர் மணிகண்டன் மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழுந்து இறந்தாரா? அல்லாது தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது மது போதையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.