கொடுங்கையூரில் நகை பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா சாலையைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 39). இவர், அதே பகுதியில் நகைகள் வைப்பதற்கான பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இங்கிருந்து நகை பெட்டிகள் தயாரித்து, நகை கடைகளுக்கும், வெளியூர்களுக்கும் அனுப்பி வந்தனர். கொரோனா ஊரடங்கால் தற்போது கம்பெனி மூடப்பட்டு உள்ளது.நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென இந்த கம்பெனியில் தீப்பிடித்து எரிந்தது. கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த நகை வைக்கும் பெட்டிகள் எரிந்து நாசமானது. தீ
விபத்துக்கான காரணம் குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.