நாமக்கல்லில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட டாக்டர்கள்

நாமக்கல்லில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட டாக்டர்கள்

Update: 2021-06-18 23:00 GMT
நாமக்கல்:
அசாம், உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம் மற்றும் ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் முன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதை கண்டித்தும், அனைத்து ஆஸ்பத்திரிக்கும் நிலையான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க கோரியும் டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல்லில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் டாக்டர் சதீஷ்குமார், செயலாளர் டாக்டர் ஜெயக்குமார் உள்பட 250 டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் சிறிது நேரம் நின்றனர். தொடர்ந்து முன்களப்பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனிடையே மத்திய அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஆஸ்பத்திரிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்