தர்மபுரி மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்கள் விரைவில் இயக்க வாய்ப்பு உள்ளதால் பணிமனைகளில் பஸ்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
தர்மபுரி:
டவுன் பஸ்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டவுன் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் அரசு டவுன் பஸ்களை தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருமிநாசினி தெளிப்பு
பணிமனைகளில் உள்ள அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளனவா? என்பதை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் சரிபார்த்து வருகிறார்கள். இதேபோல் பென்னாகரம் உள்ளிட்ட அனைத்து பணிமனைகளிலும் டவுன் பஸ்களை தூய்மைப்படுத்தும் பணி, பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சில பணிமனைகளில் இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு இயக்குவதற்கு தயார் நிலையில் அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் அதற்கான ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. அரசு முறையான உத்தரவை பிறப்பித்த உடன் அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.