சேலத்தில், போலீஸ் எனக்கூறி தர்மபுரி தொழில் அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல்-ஒருவர் கைது: 2 பேருக்கு வலைவீச்சு
சேலத்தில் போலீஸ் எனக்கூறி தர்மபுரி தொழில் அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலத்தில் போலீஸ் எனக்கூறி தர்மபுரி தொழில் அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழில் அதிபர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். தொழில் அதிபரான இவர், அங்கு மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் கார் வாங்குவதற்காக சேலம் வந்துள்ளார்.
பின்னர் அவர்கள் கார் விற்பனை புரோக்கர்களிடம் பேசினர். அப்போது கார் புரோக்கர் ஒருவர் சேலம் கிச்சிப்பாளையத்தை அடுத்த எருமாபாளையம் பகுதியில் உள்ள பழைய கார்கள் விற்பனை நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் நின்று கொண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கார்களின் விலை விவரங்கள் குறித்து கேட்டுக்கொண்டிருந்தனர்.
பணம் கேட்டனர்
அந்த சமயத்தில் ஒரு காரில் 3 பேர் அங்கு வந்தனர். அதில் இருந்து இறங்கிய 3 பேரும் சந்தோஷ் குமாரிடம், நாங்கள் போலீசார் எனக்கூறி உள்ளனர். பின்னர் திருட்டு கார்களை குறைந்த விலைக்கு நீங்கள் வாங்க வந்து இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் என்று அவர்களிடம் கூறி காரில் ஏறச்சொல்லி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் என்று கூறிய 3 பேரும், நீங்கள் போலீஸ் நிலையத்துக்கு வரவேண்டாம். திருட்டு கார் வாங்க நீங்கள் வரவில்லை என்று நாங்கள் மேல் அதிகாரிகளிடம் கூறி விடுகிறோம். அதற்கு பதிலாக நீங்கள் வைத்திருக்கும் பணத்தை கொடுத்துவிட்டு இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்றுக் கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஒருவர் சிக்கினார்
இதையொட்டி சந்தோஷ்குமாருடன் வந்த அவரது நண்பர் ஒருவர் அவர்களுக்கு தெரியாமல் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தை தொடர்புகொண்டு எங்களை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறிக்க முயற்சி செய்கிறது. எனவே எருமாபாளையம் பகுதிக்கு வரும்படி கூறி உள்ளார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் 3 பேரும் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். இருப்பினும் 2 பேர் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
போலீசாரின் விசாரணையில், அவர் மதுரை மாவட்டம் இடைபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 60) என்பதும், பணம் பறிக்கும் கும்பலுக்கு மூளையாக கரூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் எந்தெந்த பகுதிகளில் பணம் பறிக்கும் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தர்மபுரி தொழில் அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.