மேகதாது திட்டத்தில் கர்நாடகம் விதிமீறவில்லை; பசவராஜ் பொம்மை பேட்டி

மேகதாது திட்டத்தில் கர்நாடகம் விதிமீறலில் ஈடுபடவில்லை என்று சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2021-06-18 20:53 GMT
மந்திரி பசவராஜ் பொம்மை
பெங்களூரு: மேகதாது திட்டத்தில் கர்நாடகம் விதிமீறலில் ஈடுபடவில்லை என்று சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடக சட்டம் மற்றும் போலீஸ் துறை மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விசாரணை நடத்தியது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேகதாது பகுதியை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இதுகுறித்து வாதம் நடைபெற்று உள்ளது. மேகதாது திட்ட விஷயத்தில் கர்நாடகம் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இது தொடர்பான மனு நிலுவையில் உள்ளது.

கர்நாடகத்தின் நலன்

அதனால் நீர், நிலம், மொழியை காப்பதில் கர்நாடக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது. நாங்கள் சரியாக செயல்படவில்லை என்று கூறுவது தவறு. சரியான முறையில் தீவிரமாக செயல்படுகிறோம். அதனால் கர்நாடகத்தின் நலனை காப்பதில் நாங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்.
இவ்வாறு மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்