சிக்கமகளூருவில் 4-வது நாளாக தொடர்ந்து கனமழை; 10 வீடுகள் இடிந்து விழுந்தன

சிக்கமகளூருவில் 4-வது நாளாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக கொட்டிகேஆராவில் 176 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மழைக்கு 10 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

Update: 2021-06-18 20:25 GMT
கொட்டிகே ஆராவில் வீடு இடிந்திருப்பதை படத்தில் காணலாம்.
சிக்கமகளூரு: சிக்கமகளூருவில் 4-வது நாளாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக கொட்டிகேஆராவில் 176 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மழைக்கு 10 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

4-வது நாளாக கனமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெங்களூரு, சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு, தட்சிண கன்னடா, பெலகாவி, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டுகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டமான சிக்கமகளூரு, சிவமொக்காவில் விடிய, விடிய பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்து சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மாவட்டத்தில், சிக்கமகளூரு, மூடிகெரே, என்.ஆர்.புரா, கடூர் உள்ளிட்ட தாலுகாக்களில் இடைவிடாது பேய் மழை கொட்டுகிறது. 

176 மில்லி மீட்டர்

மாவட்டத்தில் அதிகபட்சமாக மூடிகெரே தாலுகாவில் தான் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மூடிகெரே தாலுகா கொட்டிகேஆராவில் 176 மில்லி மீட்டர் மழையும், ஜாவலி பகுதியில் 140 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதனால் கொட்டிகேஆரா, ஜாவலி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கொட்டிகேஆராவை சேர்ந்த ரத்னம்மா, திரிபுராவை சேர்ந்த சுப்பிரமணியா, எம்மூரை சேர்ந்த சந்திரசேகர் உள்பட மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

இருளில் மூழ்கின

சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. 

மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. பனகல் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளியின் கட்டிடத்தில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் பள்ளி கட்டிடம் இடிந்து சேதமாகியது. இதையடுத்து அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதற்கிைடயே ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்