மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி தஞ்சையில் மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி தஞ்சையில் மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரெயிலடியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாநகர தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையே பெட்ரோலியப் பொருட்களின் விலை தான் காரணம். கடந்த 40 நாட்களில் மட்டும் 21 முறை விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-யை எட்டியுள்ளது.
கட்டுப்படுத்த வேண்டும்
டீசல் விலை லிட்டர் ரூ.100-யை தொடும் நிலை உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடும் துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். மத்தியஅரசின் கொள்கையால் சிறு, குறு, பெருந்தொழில்கள் நிலை குலைந்துள்ளது.அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வேலையிழப்புகளும், வருமானம் இன்மையும் அதிகரித்துள்ளன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்தியஅரசு கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் நிர்வாகிகள் பானுமதி, பிச்சையம்மாள், சாந்தி, தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.