நெல்லை மாவட்டத்தில் மீண்டும் தட்டுப்பாடு: தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி ேபாட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி ேபாட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தட்டுப்பாடு
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. நெல்லையில் கடந்த வாரம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் பிறகு சரியானது.
இந்த நிலையில் நேற்று காலை 500 கோவேக்சின் தடுப்பூசிகள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்தன. இதில் 300 தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ள 200 தடுப்பூசிகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து தடுப்பூசிகளும் சிறிது நேரத்தில் போட்டு முடிக்கப்பட்டது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் நேற்று மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. மருத்துவக்கல்லூரி, கலெக்டர் அலுவலகம், சுகாதார நிலையங்கள் என அனைத்திலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குறுஞ்செய்தி
ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான தகவல் செல்போன் குறுஞ்செய்தி மூலம் வந்தன.
இதனால் அவர்களும் நேற்று தடுப்பூசி போடும் மையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று அறிவிப்பு செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.