கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சிவகாசியில் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். இதில் சிவகாசி நகரப்பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட மனுதாரர்கள் நேற்று காலை சிவகாசி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் பி.என்.தேவா, முருகன், சுரேஷ்குமார், லாசர், ஜோதிமணி, செல்வராஜ், மங்கம்மாள் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலரிடம் பிரச்சினை குறித்து கேட்டறிந்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் மனுக்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை கூறினார். மேலும் ரத்து செய்யப்பட்ட மனுக்களை மீண்டும் ஆய்வு செய்து தகுதி இருந்தால் உறுப்பினராக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகம் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.