நெல்லை அருகே மாணவருக்கு வெட்டு-வீடுகள் சூறை: இருதரப்பை சேர்ந்த 5 பேர் கைது
நெல்லை அருகே மாணவரை வெட்டியது, வீடுகளை சூறையாடியது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே மாணவரை வெட்டியது, வீடுகளை சூறையாடியது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவருக்கு வெட்டு
நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் முல்லைநகரைச் சேர்ந்தவர் பாலமுகேஷ். இவர் பேட்டையில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார்.
இவர் கடந்த 16-ந் தேதி மாலையில் தனது நண்பருடன் அங்குள்ள கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் திடீரென பாலமுகேசை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.
மறியல் போராட்டம்
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவர்கள் திரண்டு சென்று கீழமுன்னீர்பள்ளத்தில் உள்ள எதிர்தரப்பினரின் வீடுகள், வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த தரப்பினர் நெல்லை- அம்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதேேபால் முல்லைநகர் பகுதி மக்களும் திரண்டு பாலமுகேசை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி பாலமுகேசை வெட்டியதாக கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கரலிங்கம், அருண்பாண்டியன், இசக்கிபாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
5 பேர் கைது
இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பாலமுகேசை வெட்டிய வழக்கில் ஆரைக்குளத்தில் பதுங்கி இருந்த அருண்பாண்டியன், இசக்கிபாண்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் வீடுகள், வாகனங்களை சேதப்படுத்தியதாக கணேசன், செந்தில்குமார், ராயப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கீழமுன்னீர்பள்ளம், முல்லைநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.