கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2021-06-18 18:01 GMT
கோட்டூர்;
கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கூறினார். 
ஒன்றியக்குழு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் மணிமேகலை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், மணிமாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ.  கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினர். இதன் விவரம் வருமாறு:- 
சுவேதாபழனிவேலு (இ.கம்யூ): குன்னியூர் ஊராட்சி வீராக்கி கிராமத்தில் 10 ஆண்களாக குடிநீர் பிரச்சினை உள்ளது. கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தார் சாலை
ஆனந்தராஜ் (தி.மு.க.):- கடந்த ஆட்சியில் நிதி வரவில்லை  என்று தெரிவித்தீர்கள். தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது. அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோரை நேரில் சந்தித்து ஒன்றிய வளர்ச்சி  பணிகளுக்கு தேவையான நிதியை பெற முயற்சிக்க வேண்டும்
காசிநாதன் (தி.மு.க.): பனையூர் ஊராட்சி மேலமருதூர் கிராமத்திற்கு ரேஷன் கடை ஏற்பாடு செய்ய வேண்டும்.
 பூங்கோதை சேகர் (இ.கம்யூ): புழுதிகுடி ஊராட்சியில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதி மக்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. புழுதிக்குடி கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்
சாந்திபாலு(இ.கம்யூ): அக்கறை கோட்டகத்தில் இருந்து திருக்களர்பாலம் வரை உள்ள இணைப்பு சாலையை தார் சாலையாக சீரமைக்க வேண்டும்.
ரேணுகாவெற்றிவேல்(அ.தி.மு.க.):- பெருமாள் கோவில் நத்தம் கருப்பாயி தோப்பில் மயான திடலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். கருப்பாயி தோப்பில் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் கட்ட வேண்டும். 
வளர்ச்சி பணிகள்
மணிமேகலை முருகேசன் (தலைவர்): நாம் பொறுப்பேற்றதில் இருந்து 
 கொரோனா முதல் அலை, கன மழை, தேர்தல், கொரோனா 2-ம் அலை என நமக்கு சோதனை காலமாக இருந்தது. எனவே வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதுவரை செய்த வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. தற்போது புதிய நல்லாட்சி அமைந்துள்ளது. நமது ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்காக திட்ட மிட்டு ரூ.1½ கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுடைய ஆலோசனைப்படி விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
புதிய கட்டிடம்
மாரிமுத்து எம்.எல்.ஏ.: தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட எனக்கு தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கிராம மக்களோடு நெருங்கிய தொடர்பு உங்களுக்கு உண்டு. கிராம முன்னேற்றம் பொது மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை கொடுத்து நீங்கள் செயல்பட வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.,  ஒன்றியக்குழு தலைவர் அனைவரும் உங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த மன்றத்துக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்