நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டது
குறுவை சாகுபடி பாசனத்துக்கு நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டது.
நீடாமங்கலம்;
குறுவை சாகுபடி பாசனத்துக்கு நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டது.
கோரையாறு தலைப்பு
குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர் கடந்த 16-ந் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்தது. அன்று காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறந்து வைக்கப்பட்டது. கல்லணையிலிருந்து பாசன நீர் பெரிய வெண்ணாற்றின் மூலம் நீடாமங்கலம் அருகேயுள்ள கோரையாறு தலைப்புக்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு வந்தடைந்தது. கோரையாறு தலைப்பை மூணாறு தலைப்பு என்றும் மக்கள் அழைப்பார்கள். இதைத்தொடர்ந்து உடனடியாக பாசனத்துக்காக கோரையாறு தலைப்புஅணை திறக்கப்பட்டு வெண்ணாற்றில் 450 கன அடிநீரும், கோரையாற்றில் 662 கனஅடி நீரும், பாமணியாற்றிலிருந்து 210 கனஅடிநீரும் திறந்துவிடப்பட்டது.
கடைமடை பகுதிகளுக்கு
பொதுப்பணித்துறை பொறியாளர்கள், பணியாளர்கள் கோரையாறு தலைப்பு அணையை திறந்து வைத்தனர். இதன்பேரில் வெண்ணாற்றின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கரும், கோரையாற்றின் மூலம்1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரும், பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கரும் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இன்னும் 3 நாட்களில் கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றடையும். இதனால் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.