இரு தரப்பினரிடையே மோதல் 5 பேர் கைது
சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 5 பேர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சதீஷ்(வயது 25), ராஜேந்திரன் மகன் அஜித்(23) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரத்தில் இருந்து சேஷசமுத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினரான மணிமுத்து மகன் உதயசூரியன்(23) சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ்(20) பூமிநாதன் மகன் சதீஷ்(24) ஆகியோர் சேஷசமுத்திரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சோழம்பட்டு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே வந்தபோது ஒரு தரப்பினரின் மோட்டார் சைக்கிளில் இன்னொரு தரப்பினரின் மோட்டார் சைக்கிள் மீது உராய்வது போல் வந்ததால் அவர்கள் தவறி கீழே விழ முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
பின்னர் இரு தரப்பினரும் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து இரு தரப்பை சேர்ந்த பெ.சதீஷ், அஜித், உதயசூரியன், சூரியபிரகாஷ், பூ.சதீஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.