தண்டராம்பட்டு அருகே பிளஸ்-2 மாணவியை கற்பழித்து கருக்கலைப்பு. போக்சோவில் 2 வாலிபர்கள் கைது
தண்டராம்பட்டு அருகே பிளஸ்-2 மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை
கருக்கலைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவியிடம் பேசி பழகி வந்துள்ளார். பின்னர் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை மகேந்திரன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் வெங்கடேசன் (22) என்பவரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து வெங்கடேசன் மாணவியிடம் நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று மிரட்டி அவரும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதனால் மாணவி 2 மாத கர்ப்பமானார். இதையடுத்து மகேந்திரன், வெங்கடேசன் ஆகிய 2 பேரும் மாணவிக்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.
2 வாலிபர்கள் கைது
இதனால் மாணவிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதையறிந்த அவரது பாட்டி கேட்டபோது நடந்த சம்பவத்தை கூறி மாணவி அழுதார்.
இதுகுறித்து மாணவியின் பாட்டி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் மற்றும் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.