சிறுமியை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த 8 பேருக்கு வலைவீச்சு

சிறுமியை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா். அவருக்கு உடந்தையாக இருந்த 8 பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.

Update: 2021-06-18 17:27 GMT
பண்ருட்டி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் முத்துராஜ் (வயது 29). தொழிலாளி. கடந்த ஆண்டில் செல்போனில் ராங்கால் செய்தபோது பண்ருட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பேசினார். 

பின்னர்  அவர் அடிக்கடி பேசி வந்துள்ளார்.   சம்பவத்தன்று, பண்ருட்டிக்கு பகுதிக்கு வந்த முத்துராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். பின்பு அந்த சிறுமியை உறவினர்கள் முன்னிலையில் மேல்மலையனூர் கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார். 

 அதன்பின்னர் தான், முத்துராஜூக்கு ஏற்கனவே திருணமாகி 8 வயதில்  ஒரு குழந்தை இருப்பது சிறுமிக்கு தெரியவந்தது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் முத்துராஜை சந்தித்து கேட்டனர். அப்போது அவர்களை ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். 

இதுகுறித்து சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து, முத்துராஜ், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த முத்துராஜின் தந்தை முனுசாமி, தாய் அமிர்தா, உறவினர்கள் ராஜேந்திரன் மனைவி கவிதா, லாவண்யா, முனிராஜ், தங்கவேல், பாக்யராஜ், ஜெயமணி ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தார். 

கைது செய்யப்பட்ட முத்துராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற 8 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்

மேலும் செய்திகள்