கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை கண்டு அலறியடித்து பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

Update: 2021-06-18 17:17 GMT
கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கூடலூர் அருகே 4-ம் மைல், மீனாட்சி, குற்றிமுற்றி உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக 2 காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. 

நேற்று முன்தினம் நள்ளிரவில் கல்லிங்கரை பகுதியில் அந்த காட்டு யானைகள் புகுந்து, குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் அந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானைகள் வனத்துக்குள் செல்லாமல் போக்கு காட்டி வந்தன. இதனால் வனத்துறையினர் ரோந்து வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டி  சென்றனர். 

நேற்று காலை 6 மணிக்கு கூடலூர் சாலைக்கு அந்த காட்டுயானைகள் வந்தன. இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து 4-ம் மைல் பகுதி வழியாக பாடந்தொரை வனத்துக்குள் காட்டுயானைகள் சென்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் நடந்து செல்கிறது. இதனால் காலை நேரத்தில் எந்த பணிகளுக்கும் செல்ல முடிவதில்லை என்றனர்.

இதேபோன்று தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி, நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட புளியாம்பாறை அருகே காஞ்சி கொல்லி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தின.

மேலும் செய்திகள்