கார் மோதி தாய்-மகள் பலி

திண்டிவனம் அருகே கார் மோதி தாய்-மகள் பலியானார்கள்.

Update: 2021-06-18 17:15 GMT
திண்டிவனம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூமலையனூரை சேர்ந்தவர் செல்வம் மகன் பரமசிவம்(வயது 28). இவர், சென்னையில் இருந்து தனது மனைவி யுவந்தியா(25), மகள்கள் ஜீவா(8), அமுலு(6) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். 
திண்டிவனம் அருகே சாரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக பரமசிவத்தின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறிய அவரது மோட்டார் சைக்கிள், மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

தாய்-மகள் பலி 

இந்த விபத்தில் யுவந்தியா, அமுலு ஆகிய 2 பேரும் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த பரமசிவம், ஜீவா, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் அடுத்த நறையூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் பாபு(28), விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்த திருநாவுக்கரசு (15), இவரது தாய் அலிபாபா(37) ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இந்த விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த கோபிநாத்(45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்