14 வகை பொருட்கள் குறைவாக இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் 14 வகை மளிகை பொருட்கள் குறைவாக இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-18 17:09 GMT
ராணிப்பேட்டை

பொருட்கள் குறைவு

கொரோனா நிவாரண தொகை 2-வது தவணையாக ரூ. 2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில ரேஷன் கடைகளில் 14 வகையான பொருட்களில் சில பொருட்கள் குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது. 

இதனையடுத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புகார் தெரிவிக்கலாம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என அறிவித்து, முதல் தவணையாக ரூ.2,000 வழங்கிய நிலையில், இரண்டாம் தவணையாக ரூ. 2,000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரத்துடன் மளிகை பொருட்கள் வழங்கும்போது, பொருட்கள் சரியாக உள்ளதா, என்று பொதுமக்கள் அங்கேயே சரிபார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் மளிகைப் பொருட்கள் குறைவாக இருந்தால் எனது அலுவலக கைபேசி எண்கள் 9443222770, 9443227023, 9003464610 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கடை எண், பகுதி பெயர், விற்பனையாளர் பெயர் ஆகிய விபரங்களுடன் புகார் தெரிவித்தால், துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்