பெற்றோர் கட்டாயம் குழந்தைகள் வைத்திருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2021-06-18 16:33 GMT
வேலூர்

தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் வேலூர் ஜெயின் சங்கம் ஆகியவை இணைந்து வேலூர் ஜெயராம்செட்டி தெருவில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. நேற்று 18-ம் நாள் முகாம் நடைபெற்றது.
 
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-
தொற்று குறைந்துள்ளது

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. முதல் அலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுனர்கள் கூறிய ஆலோசனைப்படி முதல் அலையில் பெரும் உயிர் இழப்புகளை தடுத்தோம்.
2-வது அலையில் சிறிது உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பு, தடுப்பூசி செலுத்துதல் போன்றவை மூலம் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இந்த தொடர் முகாமில் இதுவரை 6,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உறுதிமொழி ஏற்க வேண்டும்

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா 3-ம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 3-வது அலையிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் தங்களையும் குடும்பத்தினரையும், உறவினர்களையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பாற்ற கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, 3-வது அலையை எதிர்கொள்ள அனைவரும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அனைவரும் கொரோனாவை ஒழிக்க உறுதிமொழி ஏற்க வேண்டும். அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்