திருவண்ணாமலையில் தாய் இறந்த சோகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை
திருவண்ணாமலையில் தாய் இறந்த சோகத்தில் சத்துணவு அமைப்பாளர் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆதிசேஷன் நகரைச் சேர்ந்தவர் உமாதேவி (வயது 49). இவர், அய்யங்குளத்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். அவரின் கணவர் பழனி. அவர்களுக்கு குருராஜ் என்ற மகன் உள்ளார்.
கருத்து வேறுபாடால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் உமாதேவி தனது தாயார் அபிதகுஜலாம்பாள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்ட அபிதகுஜலாம்பாள் உயிரிழந்தார். தாயார் உயிரிழந்ததால் உமாதேவி சோகத்தில் இருந்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்த விஷத்தை உமாதேவி குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி உமாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.