வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா கேட்டுக்கொண்டார்.;
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பதவி ஏற்றுள்ள அமர்குஷ்வாஹா நேற்று வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் கொரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வார்டுகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ அலுவலர் செல்வகுமார் மற்றும் டாக்டர்கள் சிவசுப்பிரமணியன், டேவிட் விமல்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு அமைப்பதற்கும், கூடுதல் கட்டிடங்கள் அமைப்பது குறித்தும் வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ. விடம் கேட்டறிந்தார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கூடுதல்நிதி ஒதுக்கி தரும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மருத்துவமனையில் கழிப்பிட வசதிகளை கூடுதலாக ஏற்பாடு செய்து தருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து தரும்படி கலெக்டரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
ஆய்வின்போது முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.