மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் :
முகநூலில் அவதூறு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டி புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 20). இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
மேலும் பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.
இவர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க. நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு
அதன்பேரில் சரவணனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு பின்பு சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையறிந்த பா.ஜ.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் வடமதுரை போலீஸ்நிலையத்தில் குவிந்தனர்.
இதேபோல் தி.மு.க.வினரும் அங்கு திரண்டு வந்தனர். மேலும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தனித்தனியாக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரிடம் வாக்குவாதம்
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பா.ஜ.க. தலைவர்கள் மீது, தி.மு.க.வினர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பா.ஜ.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதற்கிடையே சரவணன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, பா.ஜ.க மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் வடமதுரை போலீஸ் நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் தலைமையில் அய்யலூர் பஸ்நிறுத்தம் அருகிலும் மறியல் நடந்தது. இந்த மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அய்யலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். அதன்பிறகு இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.