சாலை விபத்தில் பலியான என்ஜினீயர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியே 91 லட்சம் நஷ்ட ஈடு
நாகை அருகே சாலை விபத்தில் பலியான சாப்ட்வேர் என்ஜினீயர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியே 91 லட்சமும், அவரது மாமனார் குடும்பத்திற்கு ரூ.7½ லட்சமும் நஷ்ட ஈடு வழங்க நாகை மாவட்ட மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே சாலை விபத்தில் பலியான சாப்ட்வேர் என்ஜினீயர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியே 91 லட்சமும், அவரது மாமனார் குடும்பத்திற்கு ரூ.7½ லட்சமும் நஷ்ட ஈடு வழங்க நாகை மாவட்ட மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா அத்திப்புலியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 71). இவர், கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் அபிநயா(26). இவரது கணவர் அனந்தகிருஷ்ணன்(32). இவர், தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முருகன் தனது மருமகன் அனந்தகிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் நாகையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்றார். கானூர் அருகே சென்றபோது திருவாரூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன், அனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரூ.1 கோடியே 98½ லட்சம் நஷ்ட ஈடு
தங்களது கணவர் இறப்பிற்கு நஷ்ட ஈடு கோரி முருகனின் மனைவி சுமதியும், அனந்தகிருஷ்ணன் மனைவி அபிநயாவும் நாகை மாவட்ட மகிளா கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், இறந்த அனந்தகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.1 கோடியே 90 லட்சத்து 92 ஆயிரத்து 693 நஷ்ட ஈடாகவும், முருகன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்து 240 நஷ்ட ஈடாகவும் வழங்க கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
சாலை விபத்தில் இறந்த இருவரின் குடும்பத்திற்கு நாகை மகிளா கோர்ட்டில் ரூ.1 கோடியே 98½ லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.