தமிழகத்தில், இந்த ஆண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

தமிழகத்தில், இந்த ஆண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Update: 2021-06-18 15:33 GMT
தஞ்சாவூர்,

தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று முன்தினம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர் பொருள் வாணிப கழக அலுவலர்களுடன் தஞ்சையில் ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் 2-வது நாளாக தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், வல்லத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை மற்றும் ரேஷன் கடை மற்றும் அருள்மொழிப்பேட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனியார் அரிசி ஆலைகளில் நெல் அரவை செய்து நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு எவ்வாறு கொடுக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தனியார் அரிசி ஆலைகளிலும் தரமான அரிசியை உற்பத்தி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அப்போது அவர்களும் தங்களுக்கு உரிய சிரமங்களை தெரிவித்தனர். இது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி அவர்களது குறைகள் தீர்க்கப்படும்.

17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் மத்திய அரசிடம் பேசி 21 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது அரிசியில் ஒரு சில கருப்பு அரிசிகள் உள்ளது. அதனை தரமாக மாற்றுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 32 லட்சத்து 40 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு தற்போது வரை 34 லட்சத்து 40 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நான்கு மாதங்கள் உள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் தேங்காமல் அரிசி ஆலை மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு எந்தவித சிரமும் இல்லாமல் அவர்களுக்கு உரிய பணம் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் குறித்து ஆய்வு செய்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அனந்தகுமார், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்