ஆற்றங்கரையோர பகுதிகளில் நடவு பணிகள் தீவிரம்

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து ஆற்றங்கரையோர பகுதிகளில் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-18 14:55 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போக நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

மேட்டூர் அணையில் உரிய அளவு தண்ணீர் இல்லாவிட்டால் தாமதமாக அணை திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

அதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் நடந்தது. அதாவது வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரப்பளவை விட 37 சதவீதம் கூடுதலாக குறுவை சாகுபடி நடந்தது. அதன்படி இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கல்லணையை 16-ந் தேதி வந்தடைந்ததும் அங்கிருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்பட்டது. அதன்படி தற்போது காவிரி மற்றும் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. தஞ்சையை அடுத்த வெண்ணாற்றில் தண்ணீர் பள்ளியக்ரஹாரத்தை தாண்டி தண்ணீர் சென்ற வண்ணம் உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நடவு பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளின் கரையோரங்களில் தற்போது சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பகுதிகளில் ஏற்கனவே நாற்றுகள் விடப்பட்டு தயார் நிலையில் இருந்ததால் தற்போது நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதர பகுதிகளில் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளும், நடவு பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்