மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி உதவி கலெக்டர் தலைமையில் நடந்தன.

Update: 2021-06-18 13:59 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் 1430-ம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி தலைமையில் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. நேற்று திருச்சிற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூர், கீழாய், கேசிகன், ஆத்தூர், நமச்சிவாயபுரம் மற்றும் மணல்மேடு ஆகிய வருவாய் கிராமங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.

அப்போது உதவி கலெக்டர் பாலாஜி கூறுகையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் மனுக்களை நேரில் அளிக்க முடியாது. பொதுமக்கள் இணையதளம் மூலம் மனுக்களை அளிக்கலாம் என்றார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் ராகவன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, உதவி தாசில்தார்கள் சரண்யா, விஜயகுமார் மற்றும் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் நாராயணன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் தாசில்தார் இளங்கோவன், தனி வட்டாட்சியர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சண்முகம் வரவேற்று பேசினார்.

ஜமாபந்தி நிகழ்ச்சியை உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்து கிராமங்களின் வருவாய் தீர்வாயம் கணக்குகளை சரி பார்த்தார்.

பின்னர் அவர் கூறுகையில், சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட மாதிரிவேலூர், வடரங்கம், குன்னம், கோபாலசமுத்திரம், புத்தூர், மாதானம், திருமுல்லைவாசல், எடமணல், சீர்காழி, சட்டநாதபுரம், வானகிரி, அகனி, கொண்டல் உள்ளிட்ட 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை, விதவை உதவி தொகை, திருநங்கை உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை விண்ணப்பமாக நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குத்தாலத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கலந்துகொண்டு ஆலங்குடி, திருமணஞ்சேரி, வானாதிராஜபுரம், கடலங்குடி, வில்லியநல்லூர், குத்தாலம், இனாம் குத்தாலம், சேத்திரபாலபுரம், தொழுதாலங்குடி, துளசேந்திரபுரம், இனாம் உமாம்பாள்புரம் ஆகிய 11 வருவாய் கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்த்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறாமல் இணைய வழியில் மனுக்களை அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இதில், தாசில்தார் பிரான்சுவா உள்ளிட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்