எடியூரப்பாவுக்கு ஆதரவாகவும்-எதிராகவும் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார்
முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் விவகாரத்தில் ஆதரவாகவும், எதிராகவும் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை கூறினர். இதில் மந்திரி சி.பி.யோகேஷ்வர் பரபரப்பு புகார் கூறினார்.
பெங்களூரு: முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் விவகாரத்தில் ஆதரவாகவும், எதிராகவும் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை கூறினர். இதில் மந்திரி சி.பி.யோகேஷ்வர் பரபரப்பு புகார் கூறினார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால் அவரை மாற்ற வேண்டும் என்று விஜயாப்புராவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கடந்த பல மாதங்களாக தொடர்ந்து பகிரங்கமாக கருத்துகளை கூறி வருகிறார்.
ஆனால் அவர் மீது பா.ஜனதா மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர், அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பாவை மாற்றக் கோரி பா.ஜனதா மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
பா.ஜனதா மேலிடம், எடியூரப்பாவை மாற்றும் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை விட்டு விலக தயார் என்று எடியூரப்பா அறிவித்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் செயல்பாடுகள்
இது குறித்து விளக்கம் அளித்த பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து மேலிடம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார். ஆனால் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் அவரே முதல்-மந்திரியாக நீடிப்பார் என்று அவர் கூறவில்லை.
அதனால் எடியூரப்பவை மாற்றும் விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் இன்னும் ஒரு உறுதியான முடிவுக்கு வரவில்லை என்றே சொல்லப்படுகிறது.
கர்நாடகத்தில் எடியூரப்பாவை மாற்றும் விவகாரம் குறித்து சூடான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார்.
முதல் நாளில் அவரை மந்திரிகள் சந்தித்து அரசியல் செயல்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி விளக்கினர். அதைத்தொடர்ந்து பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மேலிட பொறுப்பாளரை பா.ஜனதாவின் பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பேசினர்.
எடியூரப்பாவை மாற்றக்கூடாது
ருபாலி நாயக், ரகுபதி பட், ஹாலப்பா, ஆசார் ஹாலப்பா, பெல்லி பிரகாஷ், ரேணுகாச்சார்யா, மாடால் விருபாக்ஷப்பா உள்பட பல எம்.எல்.ஏ.க்கள், அவரை சந்தித்தனர். அப்போது அவர்கள், எக்காரணம் கொண்டும் எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்றும், மீதமுள்ள 2 ஆண்டுகளும் அவரே முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தங்களின் கருத்துகளை கூறினர்.
மேலும் சுகாதாரத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர், எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத், எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. உள்ளிட்ட மேலும் சிலர் அருண்சிங்கை சந்தித்து பேசினர். அவர்கள், முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர்
குறிப்பாக சி.பி.யோகேஷ்வர் பேசுகையில், " பழைய மைசூரு மண்டலத்தில் பா.ஜனதா பலவீனமாக இருக்கிறது. அதனால் அங்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கக்கூடாது.
ஆனால் தனது சொந்த தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சொல்படி முதல்-மந்திரி செயல்படுகிறார். மந்திரியாக இருந்தும் எனது கருத்து எடுபடுவது இல்லை. முதல்-மந்திரி இவ்வாறு செயல்பட்டால், அந்த பகுதியில் எவ்வாறு கட்சியை பலப்படுத்துவது. இந்த பிரச்சினையை சரிசெய்ய கட்சி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறினார்.
அருண்சிங்கை சந்தித்த பிறகு எச்.விஸ்வநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டது, அதனால் அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று மேலிட பொறுப்பாளரிடம் கூறியுள்ளேன்" என்றார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சர்யா, எஸ்.ஆர்.விஸ்வநாத் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எச்.விஸ்வநாத் ஒரு சகுனியை போன்றவர் என்று விஸ்வநாத் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
வெளியில் கூறக்கூடாது
தன்னிடம் கூறும் கருத்துகளை வெளியில் கூறக்கூடாது என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் மேலிட பொறுப்பாளர் உத்தரவிட்டு இருந்தார். அதையும் மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து கூறிய எச்.விஸ்வநாத்திடம் அருண்சிங் விளக்கம் கேட்டுள்ளார். அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளுங்கட்சியை சேர்ந்த முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ., தனது செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாக புகார் கூறியுள்ளார். இந்த புகாரை பா.ஜனதா தலைவர்கள் மறுத்துள்ளனர். ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வே, தனது செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாக கூறியுள்ள புகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழைப்பு இல்லை
அருண்சிங்கை சந்திக்க வருமாறு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. யாருக்கு சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அவர்கள் மேலிட பொறுப்பாளரை சந்திக்கலாம் என்று கூறினர். அதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வந்து அருண்சிங்கை சந்தித்தனர்.
எம்.எல்.ஏ.க்களை சந்திக்கும் நிகழ்வு குமரகிருபா விருந்தினர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த நிகழ்வு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அருண்சிங்குடன் 52 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கை 52 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அதில் சுமார் 36 பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவாகவும், 10 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலையாகவும் அதாவது கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதை ஆதரிப்பதாகவும், மீதமுள்ள 6 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் கருத்து அடங்கிய அறிக்கையை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் அருண்சிங் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.