பல்பொருள் அங்காடியில் கைவரிசை காட்டிய லாரி டிரைவர் கைது
திருச்சிற்றம்பலத்தில், பல்பொருள் அங்காடியில் கைவரிசை காட்டிய லாரி டிரைவர் கையும், களவுமாக பிடிபட்டு கைதானார்.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலத்தில், பல்பொருள் அங்காடியில் கைவரிசை காட்டிய லாரி டிரைவர் கையும், களவுமாக பிடிபட்டு கைதானார்.
பல்பொருள் அங்காடியில் கைவரிசை
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் ஒரு பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இந்த வணிக நிறுவனத்திற்குள் நேற்று முன்தினம் மாலை வந்த ஒரு நபர், பொருட்கள் வாங்குவது போல் உள்ளே சென்று அங்கும், இங்கும் நோட்டமிட்டு விட்டு வெளியில் சென்று விட்டார். இதனை கவனித்த கடை ஊழியர்கள் வெளியில் சென்ற அந்த நபரை அந்த வணிக நிறுவனத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது அவரது இடுப்பு பகுதியில் அவர் அணிந்திருந்த கைலிக்குள் கடையில் இருந்து திருடப்பட்ட ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை ஊழியர்கள் கண்டறிந்தனர். இதற்கு முன்பாக இதே வணிக நிறுவனத்திற்கு சென்ற அந்த நபர், பொருட்கள் வாங்குவதுபோல் உள்ளே சென்று பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.
கையும், களவுமாக சிக்கினார்
இதுகுறித்து கடை ஊழியர்கள் அந்த கேமராவை ஆய்வு செய்தபோது, பொருட்களை திருடிச்சென்றவர் முக கவசம் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர் கடைக்கு மீண்டும் வருகிறாரா? என கடை ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் பல்பொருள் அங்காடிக்கு வந்த அதே நபர் பொருட்களை திருடி சென்றபோது கையும், களவுமாக கடை ஊழியர்களிடம் சிக்கிக்கொண்டார்.
லாரி டிரைவர்
இதுகுறித்து அந்த வணிக நிறுவனத்தின் நிர்வாகி சசிகுமார் சம்பந்தப்பட்ட நபரை திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணத்தை சேர்ந்த ராஜா அலாவுதீன்(வயது 48) என்பதும் இவர் அதே பகுதியில் லாரி டிரைவர் என்பதும் தெரிய வந்தது.
கைது
மேலும் இவர் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் கைவரிசை காட்டி பொருட்களை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ராஜா அலாவுதீனை நேற்று முன்தினம் இரவு திருச்சிற்றம்பலம் போலீசார் பட்டுக்கோட்டையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை கிளைச்சிறையில் அடைத்தனர்.