குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? தென்காசி புதிய கலெக்டர் கோபால சுந்தரராஜ் பேட்டி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? என்பது பற்றி புதிதாக பொறுப்பேற்ற தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் கூறினார்.

Update: 2021-06-17 19:21 GMT
தென்காசி:
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? என்பது பற்றி புதிதாக பொறுப்பேற்ற தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் கூறினார்.

புதிய கலெக்டர்

தென்காசி மாவட்ட கலெக்டராக சுமார் 7 மாதங்களாக பணியாற்றிவந்த சமீரன் கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்டத்தின் 3-வது கலெக்டராக கோபால சுந்தரராஜ் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.

இவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக பணியாற்றியவர். இந்திய அரசின் குடிமைப்பணிக்கான தேர்வில் 2012-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர். தூத்துக்குடி மாவட்டத்தில் துணை கலெக்டராகவும், சென்னை பெருநகர மாநகராட்சியில் வட்டார துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

பேட்டி

புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கோபால சுந்தரராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து துறைகளிலும் அரசின் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படும். குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். குற்றாலத்தில் அரசின் தளர்வு உத்தரவைப் பொறுத்து தான் குளிப்பதற்கு அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக பொறுப்பேற்ற கலெக்டருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதற்கிடையே கலெக்டர் கோபால சுந்தரராஜ் ராமநதி அணை பகுதி மற்றும் பாசன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பாசன பகுதியான பாப்பான் கால்வாயை பார்வையிடும் போது, அந்த பகுதி விவசாயிகள் கால்வாயில் உள்ள அமலைச் செடிகளை அகற்றி கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் பகுதிக்கு முறையாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் வருகிறதா? என கேட்டறிந்தார். மேலும் கடையம் ஏ.ஆர். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளின் சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்தார். அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 

மேலும் செய்திகள்