செங்கல்சூளை உரிமையாளர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

வடக்கன்குளம் அருகே செங்கல்சூளை உரிமையாளர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-06-17 19:04 GMT
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அருகே செங்கல்சூளை உரிமையாளர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளர்கள்

வடக்கன்குளம் அருகே பழவூரைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம் மகன் ஜெனிட்டன் (வயது 35), எமர்சன் மகன் அலெக்ஸ் (20). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் பழவூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் நடந்து சென்ற வடமாநில இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிள் உரசியது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தப்பி ஓடிய அந்த இளைஞர்களை ஜெனிட்டன், அலெக்ஸ் ஆகிய 2 பேரும் விரட்டிச் சென்றனர்.

கத்திக்குத்து

அப்போது அங்குள்ள செங்கல்சூளை வழியாக ஓடியபோது, ஈரமான செங்கல்கள் சேதமடைந்தன. இதனை செங்கல்சூளை உரிமையாளரான சாமித்துரை (54) கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெனிட்டன், அலெக்ஸ் ஆகிய 2 பேரும் கத்தியால் சாமித்துரையின் முதுகில் குத்தினர். இதனை தடுக்க முயன்ற செங்கல்சூளை தொழிலாளியான சக்திவேலுக்கும் (50) கையில் கத்திக்குத்து விழுந்தது.

இதில் காயமடைந்த சாமித்துரை, சக்திவேல் ஆகிய 2 பேரும் லெவஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெனிட்டன், அலெக்ஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்