கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் திருச்சிக்கு 6-வது இடம்-கலெக்டர் எஸ்.சிவராசு பேட்டி
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் திருச்சி 6-வது இடம் பிடித்துள்ளது. இனி வார்டுகள் வாரியாக தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருச்சி,
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் திருச்சி 6-வது இடம் பிடித்துள்ளது. இனி வார்டுகள் வாரியாக தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மாற்றுத்திறனாளி முகாம்
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி அளிக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை திருச்சி கலையரங்கத்தில் நேற்று மாவட்ட சுகாதாரப்பணிகள், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தின.
இந்த முகாமை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தொடக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். முகாமில், 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.
அப்போது கலெக்டர் எஸ்.சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அளவில் 6-வது இடம்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக கடந்த 10 நாளில் மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் கராணமாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் தடுப்பூசி செலுத்தியதில் திருச்சிக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது.
இதுவரை 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருச்சி மாவட்டத்தில் 30 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8.5 லட்சம் பேரை தவிர்த்து 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்க வேண்டியுள்ளது. முதல்தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று வ ந்ததில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. சீறுநீரகத்தை பாதிப்பதோ, மூச்சுவிடுவதில் சிரமம் என்ற நிலைக்கு ஆளாகவில்லை. லேசான பாதிப்பு மட்டுமே தெரியவந்துள்ளது. எனவே, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
18 வயதுக்குள் கீழ் உள்ளோருக்கும் தடுப்பூசி
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். இதற்கு அடுத்தபடியாக 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய நபர்கள் வெளியில் செல்வதை வாடிக்கையாகக் கொண் டுள்ளனர். எனவே, இத்தகைய நபர்கள் மூலம் வேறு யாரு க்கும் தொற்றுப் பரவக் கூடாது என்பதால் 18 வயதுக்கு மேற்பட்டோர், முதியோருக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அடுத்தக்கட்டமாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் த டுப்பூசி செலுத்த ஆய்வு நடைபெறுகிறது. மத்திய அரசு வழிகாட்டுதல்படி 18 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு ஆய்வறிக்கை கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்.
வார்டு வாரியாக..
கொரோனா தொற்றின் 3-வது அலையை தடுக்க படுக்கைகள், மருத்துவமனைகள், ஆக்சிஜன் வசதியை தயார்படுத்துவதற்கு பதிலாக, அனைவரும் முகக் கவசம் அணிதல், கை கழுவும் திரவம் பயன்படுத்துதல், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றை பின்பற்றினாலே போதுமானது. 3-வது அலை வந்தாலும் தொற்று பாதிப்பு இருக்காது. 2-வது அலையில் அதிக பாதிப்புக்கு காரணம், முதல் அலையின்போது தீவிரம் குறைந்தவுடன் கட்டுப்பாடு விதிகளை மீறியதால்தான் பாதிக்க நேரிட்டது. எனவே, முகக் கவசம் அவசியமானது. தேவையின்றி வெளியே வரக் கூடாது.
இம்மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 46 லட்சம் தடுப்பூசிகளை அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. திருச்சிக்கான ஒதுக்கீடு கிடைத்தவுடன் முழுமையாக பிரித்து வழங்கப்படும்.
தடுப்பூசி முகாம்களில் அதிகளவில் மக்கள் கூடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வார்டு வாரியாக முகாம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். வரப்பெறும் ஒதுக்கீடுக்கு ஏற்ப திருச்சி மாநகரப் பகுதியில் நாளொன்றுக்கு 4 வார்டுகளில் முகாம் நடைபெறும். பள்ளிகள் திறக்க இன்னும் 3 மாத காலம் ஆகலாம் என்பதால், அந்தந்தப் பகுதிகளில் பள்ளிகளை தேர்வு செய்து விசாலமான இடத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்,
இவ்வாறு அவர் தெரிவித்தார்.