திருவண்ணாமலை பூ, காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் பூ, காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-17 18:12 GMT
திருவண்ணாமலை

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தேரடி வீதியில் உள்ள கற்பகம் கூட்டுறவு வளாகத்தில் செயல்பட்டு வரும் 4 நியாய விலைக் கடைகளில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் ஜோதி ‘பூ’ மார்க்கெட் மற்றும் திருவூடல் தெருவில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

வியாபாரிகளுக்கு அறிவுரை

அப்போது கலெக்டர், வியாபாரிகள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும். குறிப்பாக கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா ‘வார் ரூம்’ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, உதவி கலெக்டர் வெற்றிவேல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜிதா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்