கார் கவிழ்ந்து வாலிபர் பலி
திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியானாா்.
திண்டிவனம்,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்தவர் அருமைநாதன் மகன் பாரத்(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக இருந்தார். இவரும், இவரது உறவினரான கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மகன் பாரத்(22) என்பவரும் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். திண்டிவனம் அருகே பாதிரி கிராமத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வில்லியனூரை சேர்ந்த பாரத் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.