Sub Inspectors wife Tarna struggles

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Update: 2021-06-17 17:57 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இளங்கோவன். இவருடைய மனைவி இந்துமதி (வயது 30). இவர் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தனது தாய் மரகதம் மற்றும் உறவினர்களுடன் வந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்துமதி கூறுகையில், எனக்கும் எனது கணவர் இளங்கோவனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 8 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் என்னுடன் வாழ மறுத்து பிரச்சினை செய்து வருகிறார். இதுபற்றி ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன். இருப்பினும் உரிய விசாரணை நடத்தவில்லை. மேலும் தொடர்ந்து இதுபோன்று அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தால் கொலை செய்து விடுவதாக என்னை எனது கணவர் மிரட்டி வருகிறார். எனவே இதுகுறித்து தாங்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ மறுத்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரணை செய்வதாக கூறினார். இந்த போராட்டத்தினால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்