கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை
கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமாக சி.ஐ.டி.யு. உடன் இணைந்து உள்ள ஈரோடு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மனுவை ஈரோடு மாவட்ட கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தின் தொழிலாளர் உதவி ஆணையாளர் வழியாக நேற்று தொழிற்சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக தங்கள் (மு.க.ஸ்டாலின்) தலைமையில் பொறுப்பு ஏற்று உள்ள அரசு மிகக்கடுமையான காலகட்டத்தை சவாலுடன் சந்தித்து, மிகக்குறுகிய காலத்தில் கொரோனா 2-வது அலையின் கடும் தாக்குதலை கட்டுப்படுத்தி உள்ளது. உங்கள் நடவடிக்கையால் தமிழகம் கொரோனா தாக்குதலில் இருந்து நிச்சயம் மீட்டு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கால் தொழில்கள் முடக்கப்பட்டு, உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகமான தொழிலாளர்கள் கட்டுமான துறையில் உள்ளனர். கட்டுமான தொழில் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் முடக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
இ-பதிவு முறை
ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ-பதிவு முறையில் பணியாளர்கள் வேலைக்கு செல்ல தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடைமுறையில் சாதாரண கட்டுமான தொழிலாளர்கள் இ-பதிவு செய்து வேலைகளுக்கு செல்வது என்பது இயலாததாகும். எனவே இ-பதிவு முறையை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.
மேலும் கட்டுமான தொழிலாளர்கள் சொந்த வீடுகள் இன்றி வாடகை வீடுகளில் உள்ளனர். வருமானம் இழப்பு காரணமாக வாடகை கொடுக்க கூட முடியாத நிலை உள்ளது. குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக வாங்கிய கடன், வட்டி, கடன் தவணை செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையும் உள்ளது.
ரூ.3 ஆயிரம் நிவாரணம்
கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அப்போதைய அரசு 2 முறை தலா ரூ.1000 மற்றும் அரிசி, எண்ணை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கியது. அதே நேரம் ஊரடங்கு தளர்வுக்கு பின்னரும் கட்டுமான தொழில் பழைய நிலையை அடையாததால் பெரும்பாலானவர்கள் வேலை இழந்து உள்ளனர்.
எனவே கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கணக்கில் கொண்டு கொரோனா கால நிவாரணமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினர் என்ற தகுதியை கொண்டு வழங்காமல் அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது.