வேலூர் மாநகராட்சியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து பரவல் வேகமாக இருந்தது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் ஆயிரத்தை தாண்டி பதிவானது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் தினமும் 700-க்கும் மேற்பட்டவர்கள் பாக்கப்பட்டனர். மாநகராட்சி பகுதிகளில் எல்லா தெருக்களிலும் பாதித்தவர்கள் இருந்தனர். பாதிப்பு அதிகம் காணப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்குப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அபராதம் விதித்தல் போன்றவை கடுமையாக்கப்பட்டது. இதன் காரணமாகவும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாலும் பாதிப்பு சதவீதம் வெகுவாக குறைய தொடங்கியது.
9 பேருக்கு மட்டுமே பாதிப்பு
தற்போது 100-க்கு கீழே தொற்று பாதிப்பு எண்ணிக்கை வந்துள்ளது. மாநகராட்சி பகுதியிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 4 மண்டலங்களை கொண்ட மாநகராட்சியில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதுதவிர வெளிமாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்களும் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 1, 2 ஆகிய மண்டலத்தில் தலா ஓருவரும், 3-வது மண்டலத்தில் 4 பேரும், 4-வது மண்டலத்தில் 3 பேரும் என 9 பேர் கொரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.