கல்குவாரி செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு
நத்தம் அருகே கல்குவாரி செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
செந்துறை:
நத்தம் அருகே செந்துறை செல்லும் சாலையில், கரடிக்குட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளை உடைக்கும்போது, தூசுக்கள் பறந்து விளைநிலங்களில் படிவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சளி, இருமலால் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதாகவும், அங்குள்ள வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனைக்கண்டித்தும், கல்குவாரி தொடர்ந்து செயல்பட எதிர்ப்பு தெரிவித்தும் செங்குளம், புதுப்பட்டி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கல்குவாரிக்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் தாசில்தார் விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக கனிம வளத்துறை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் உறுதி அளித்தனர்.
அதுவரை கல்குவாரி செயல்படக்கூடாது என்று குவாரி நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் நேற்று மாலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
----------