வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க கூடாது. கலெக்டர் அறிவுறுத்தல்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கக் கூடாது என்று ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினார்.

Update: 2021-06-17 17:28 GMT
வேலூர்

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஐஸ்வர்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், தடுப்பு பணிகள் மற்றும் தொற்று தடுப்பு விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
 
அப்போது கலெக்டர் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க கூடாது

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் வேளையில் தொற்று பரவல் அதிகரித்தால் கட்டுப்படுத்துவது கடினம். 

கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்தப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சளிமாதிரி பரிசோதனை முடிவுகளை விரைந்து கொடுக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானால் அவர்களை உடனடியாக கோவிட் கேர் சிகிச்சை மையத்தில் அனுமதிக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடி பேசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்கள் மூலம் கிராமப்புற பகுதிகளில் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்