திண்டுக்கல் புதிய கலெக்டராக விசாகன் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கலெக்டராக விசாகன் பதவி ஏற்றார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
புதிய கலெக்டர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த விஜயலட்சுமி, பால்வளம் மற்றும் மீன்கள் நலவாரியத்துறையின் இணை இயக்குனராக மாற்றப்பட்டார். மேலும் மதுரை மாநகராட்சி கமிஷனர் எஸ்.விசாகன் திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.விசாகன் நேற்று பதவி ஏற்றார். இவர் பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. படித்து இருக்கிறார். தர்மபுரியில் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், ஸ்பிக், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம், டைடல் பார்க் ஆகியவற்றில் மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராகவும், மதுரை மாநகராட்சியின் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.
கொரோனா ஆய்வு கூட்டம்
இதற்கிடையே கலெக்டர் விசாகன் பதவி ஏற்றதும், முதல் நிகழ்வாக கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தினேஷ்குமார், நலப்பணிகள் துணை இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலெக்டர் விசாகன் பேசுகையில், கொரோனா தடுப்பு பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டால், கட்டுப்பாட்டு பகுதியாக மாற்ற வேண்டும். இதுதவிர காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துவதோடு, வீடுகளுக்கு சென்று காய்ச்சல் மற்றும் சளி, இருமல் பாதித்தவர்களை கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும், என்றார்.