கூடலூர் பகுதியில் பிடிபட்ட காட்டு யானை மரக்கூண்டில் அடைப்பு

கூடலூரில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமையில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் அடைத்தனர்.

Update: 2021-06-17 17:04 GMT
கூடலூர்

கூடலூரில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமையில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் அடைத்தனர்.

காயத்துடன் அவதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக காயத்துடன் ஆண் காட்டு யானை சுற்றி திரிந்தது. மேலும் அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டு அட்டகாசம் செய்தது. இதையடுத்து காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதைத்தொடர்ந்து காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாததால் காயம் அதிகமாகி மோசமான நிலைக்கு சென்றது. இதுகுறித்து தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்படி, வனத்துறையினர் யானையின் காயத்தை குணப்படுத்த பழங்களுக்குள் வைத்து மருந்துகளை வழங்கினர்.

யானை பிடிபட்டது

இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர் மார்தோமா நகர் ஈப்பன்காடு பகுதியில் காட்டு யானை நின்றிருந்தது. அப்போது  யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சுமங்களா, விஜய், உதயன், வசிம் உள்பட 5 கும்கி யானைகள் உடனடியாக வரவழைக்கப்பட்டது. 

பின்னர் காட்டு யானையை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் சுற்றிவளைத்து பிடித்து கயிறுகளால் மரங்களில் கட்டி வைத்தனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் சுகுமாரன், ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் விரைந்து வந்து காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

சம்பவ இடத்தில் கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அன்வர்தின், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மருத்துவ குழுவினர் வரவழைப்பு

பின்னர் காட்டு யானையை முதுமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதல் கால்நடை டாக்டர்கள் மனோகரன், விஜயராகவன் மற்றும் நாமக்கல் கால்நடை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் தர்மசீலன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டனர். 

பின்னர் இரவு முழுவதும் வனத்துறையினர் கொட்டும் மழையில் காட்டு யானையை பராமரித்து வந்தனர். தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு வனத்துறையினர் கயிறு கட்டி இழுத்து வந்தனர். பின்னர் வனத்துறையினர் லாரியில் யானையை ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் காட்டு யானை லாரியில் ஏற மறுத்தது.

லாரியில் ஏற்றினர்

தொடர்ந்து காலை 10.45 மணிக்கு கும்கி யானைகள் காட்டு யானையை முட்டி தள்ளி லாரியில் ஏற்றியது. இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் முகாமுக்கு காட்டு யானை கொண்டு செல்லப்பட்டது.

மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் வனத்துறையினர் அமைத்து அந்த கூண்டுக்குள் யானையைக் கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் லாரி சேற்றில் சிக்கியது.

 இதனால் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு காட்டு யானையை லாரியில் இருந்து வனத்துறையினர் இறக்கினர்.

மரக்கூண்டில் அடைப்பு

தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை கயிறு கட்டி வனத்துறையினர் மரக்கூண்டுக்குள் இழுத்து சென்றனர். மதியம் 2.50 மணிக்கு காட்டு யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் காட்டு யானையை பரிசோதித்து காயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். நீண்ட நாட்களாக கூடலூர் பகுதியில் காயத்துடன் அவதிப்பட்ட காட்டுயானையை பிடித்து சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்