நீலகிரியில் தொடர் மழையால் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதம்
நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.
ஊட்டி
நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
4 மின் கம்பங்கள் சேதம்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கூடலூர், பந்தலூர், அப்பர்பவானி, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் அதிகமாக மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று ஊட்டி மரவியல் பூங்கா மற்றும் மான் பூங்கா அருகே 5 மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் 4 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மின்தடை
இதனால் ஊட்டி பெர்ன்ஹில், மஞ்சனக்கொரை, எல்க்ஹில், காந்தல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மின் தடைபட்டது. இதனைத்தொடர்ந்து கொட்டும் மழையிலும் மின் ஊழியர்கள் மின் கம்பிகள் மீது விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர்.
பின்னர் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பங்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நடப்பட்டு, மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பல பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்மட்டம் உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் கடந்த 4 நாட்களில் 684 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் மின்வாரிய அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
காமராஜ் சாகர் அணையில் மொத்த கொள்ளளவான 49 அடியில் 37 அடியாகவும், அவலாஞ்சி அணையில் 171 அடி கொள்ளளவில் 85 அடியாகவும், அப்பர்பவானி அணையில் 210 அடி கொள்ளளவில் 145 அடியாகவும், எமரால்டு அணையில் 184 அடி கொள்ளளவில் 83 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. மற்ற அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
வீடு இடிந்து விழுந்து
பந்தலூர் தாலுகா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதில், அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகள் மீது விழுந்த மரங்களை வெட்டி அகற்றி மின்இணைப்பு சரிசெய்தனர்.
உப்பட்டி அருகே மேஸ்திரி குன்னு பகுதியில் பெய்த மழையால் லட்சுமணன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பிதர்காடு அரசு தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பந்தலூர் பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழையளவு
நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீட்டர் மழை பதிவானது. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-22.8, நடுவட்டம்-32, மசினகுடி-33, அவலாஞ்சி-207, எமரால்டு-111, அப்பர்பவானி-120, கூடலூர்-24, தேவாலா-34, செருமுள்ளி-52, பாடாந்தொரை-80, பந்தலூர்-93, சேரங்கோடு-54 மழை பதிவானது.