தச்சு பட்டறையில் பணம் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் தச்சு பட்டறையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர், பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் சிவன் கோவில் அருகே தச்சு பட்டறை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை இவர், தச்சு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் பட்டறையை திறப்பதற்காக வந்தார். அப்போது பட்டறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பட்டறையின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் எல்.இ.டி, டி.வி., கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் நாகராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.